விவசாயிகளுக்கு உரமானியம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு அறிவித்ததன்படி, தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் திட்டம் மார்ச் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதற்காக, ரஷ்யாவிலிருந்து நன்கொடையாக கிடைத்த 27,500 மெட்ரிக் டன் MOP உரத்தை எப்பாவல ராக் பாஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்துவைத்து, 56,700 மெட்ரிக் டன் சிறப்பு AMP தேங்காய் உரமாக உருவாக்க அரச உர நிறுவனம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த உரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்கும் விநியோக நடவடிக்கைகள் விரைவாகச் செய்யப்படுவதற்கும் தென்னை பயிர்ச்செய்கை சபையும் அரச உர நிறுவனங்களும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
இதுகுறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன விளக்கமளிக்கையில், தற்போது சந்தையில் 9,000 ரூபாய்க்கு விற்பனையாகும் 50 கிலோகிராம் அளவுள்ள உர மூட்டையை, அரசு மானியத்தின்கீழ் ரூ. 4,000 என்ற நிவாரண விலையில் வழங்கும் திட்டம் இந்த மாதம் 30ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தார். இதற்காக, வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஹந்தபனகல தென்னை தோட்ட நாற்றங்கால் வளாகத்தில் உர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் ரூ. 2,000 கோடி முதலீடு மேற்கொண்டுள்ளது. உர மானியத்தைப் பெற விரும்பும் தென்னை விவசாயிகள், தென்னை பயிர்ச்செய்கை சபை வழங்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை, தென்னை பயிர்ச்செய்கை சபையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coconutsrilanka.lk இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.