இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் – விரைவில் நடைமுறைக்கு...
இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இரண்டு மலைகளுக்கிடையே ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு பயணிக்கக்கூடிய கேபிள் கார்களில் செல்வதன் மூலம் பயணிகள் அபூர்வமான அனுபவத்தை பெற முடியும்.
மத்திய மலைநாட்டில், கம்பளை பகுதியில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்திலிருந்து அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் நீளமான பாதையில் இந்த கேபிள் கார் சேவை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது. முதல் கட்ட பணிகள் இவ் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனத் தூதர் குய் ஜென்ஹோங், திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய அம்புலுவாவ அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான அநுராத ஜெயரத்னவை அண்மையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அநுராத ஜெயரத்ன,
"இந்த திட்டம் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்திருந்தன. இது ஒரு காலத்தில் வெகு தொலைவான கனவாக இருந்த நிலையில், இன்று சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பால் நிஜமாகிவிட்டது.
மேலும், நுவரெலியா சென்று கொண்டிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கம்பளையில் இருந்து பயணத்தைத் தொடங்கி, அம்புலுவாவவில் கேபிள் கார் சேவையை அனுபவிக்கக் கூடிய வகையில், இந்த சேவை எதிர்காலத்தில் கம்பளை ரயில் நிலையத்திற்கும் விரிவுபடுத்தப்படும்," என தெரிவித்தார்.