நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம்!


நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்து வருவதாகவும், சிலர் தற்கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் கையடக்க தொலைபேசிகளிலும் சமூக ஊடகங்களிலும் அதிக நேரம் செலவிடுவதால், பெற்றோர்-குழந்தை உறவுகளில் குறைபாடு ஏற்பட்டு, இது மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடிய முக்கிய காரணியாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

10 முதல் 19 வயது வரையிலான இளம் பருவத்தினை மிகவும் முக்கியமான வளர்ச்சி காலமாகக் கருதலாம். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3.5% பேர் இந்த வயதுப் பிரிவில் அடங்குகின்றனர். இப்பருவத்தில் உடல், மன, மற்றும் சமூக மாற்றங்கள் தீவிரமாக நிகழ்வதால், குழந்தைகள் மீது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாணவர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்த தகவல்களை பெறுவதற்காக, சுகாதார மேம்பாட்டு பணியகம் 2024 ஆம் ஆண்டில் 'உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பை' நடத்தியது. இதில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 2,585 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கு முன்பு 2016 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, தற்போதைய முடிவுகள் பல பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

உடல் ஆரோக்கியம் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின்படி, மாணவர்களில் 21.4% பேர் குறைந்த எடையுடனும், 12.1% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 4.3% மாணவர்கள் வீட்டில் உணவு இல்லாததால் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனநலம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மாணவர்களில் 22.4% பேர் கடந்த வருடத்தில் பெரும்பாலும் தனிமையை உணர்ந்ததாகவும், 7.5% மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக 18% பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 15.4% மாணவர்கள் கடந்த ஆண்டில் தற்கொலைக்கு வலுவாக தூண்டப்பட்டுள்ளதாகவும், 9.6% பேர் தற்கொலை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் இதை மிகுந்த ஆபத்தான நிலையாகக் குறிப்பிடுகின்றனர்.

மேலும், 5.7% மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திலும், 5.3% பேர் மது அருந்தும் பழக்கத்திலும் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2016 கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது அதிகரித்திருப்பது கவலைக்குரியதாகும். போதைப்பொருள் பயன்பாட்டும் அதிகரித்து, 3.2% மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாகவும், கடந்த மாதம் மட்டும் 2.1% மாணவர்கள் இதனைச் செய்ததாகவும் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

நல்ல தூக்கமில்லாமை கூட மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடியதாக உள்ளதால், பாடசாலை நாட்களில் 63% மாணவர்கள் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்குவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், 28.4% மாணவர்கள் நாளுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இணையம் மற்றும் சமூக ஊடகங்களை கல்வி சாராத நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணர்ச்சிகள், மனநிலை மற்றும் நடத்தை குறித்து அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.