பெண்களின் திருமண வயதை 18 ஆக சட்டத்தில் உள்வாங்குமாறு உலக நாடுகளுக்கு WHO வழிகாட்டல்!
உலக சுகாதார அமைப்பு (WHO) இளம் பருவ கர்ப்பங்களைத் தடுப்பதையும், குறிப்பாக வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், 15–19 வயதுடைய சிறுமிகளுக்கு ஏற்படும் உடல்நல உபாதைகள் மற்றும் சமூக சவால்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட புதிய வழிகாட்டுதல்களை நேற்று (23) வெளியிட்டுள்ளது.
உலகளவில் இந்த வயதினரிடையே ஆரம்பகால கர்ப்பம் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இது தொடர்பில் மூலோபாய நடவடிக்கைளை எடுப்பதற்கு அது நாடுகளை வலியுறுத்துகிறது:
சட்டங்களைத் திருத்துதல் மற்றும் சமூக அடிப்படையிலான முயற்சிகள் மூலம் சிறு வயதுத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்.
நிதி ஊக்கத்தொகைகள், உதவித்தொகைகள் மற்றும் சமூக ஆதரவை வழங்குவதன் மூலம் இடைநிலைக் கல்வியை முடிக்கும் வரையில் பெண்களைப் பாடசாலைகளில் தக்க வைத்தல்..
பெரியவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே கருத்தடை செய்வதையும் இளம் பருவத்தினரின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை அணுகுவதையும் இலகுவாக்கல்.
சிறுவர் மற்றும் சிறுமியர் இரு பாலாருக்கும் சம்மதம் வழங்குவது , இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கருத்தடை பயன்பாடு பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் விரிவான பாலியல் கல்வியை உறுதிப்படுத்துதல்.
மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ப , 18 வயதுக்குட்பட்ட திருமணத்தைத் தடை செய்வதற்கான சட்டங்களையும், இந்த நடைமுறையைத் தடுப்பதற்கான சமூக ஈடுபாட்டையும் இந்த வழிகாட்டுதல் பரிந்துரைக்கிறது.
“ஆரம்பகால கர்ப்பங்கள் பெரும்பாலும் ஆழமாக வேரூன்றிய பாலின சமத்துவமின்மையை பிரதிபலிக்கின்றன, மேலும் பெண்களின் உடல்நலம், கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கின்றன,”என்று WHO இன் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் டாக்டர் பாஸ்கல் அல்லோட்டி கூறினார்.
பெண்களுக்கு தாமாகவே தெரிவு செய்வதற்கு இடமளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
WHO இன் கூற்றுப்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் ஆண்டுதோறும் 21 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவப் பெண்கள் கர்ப்பமாகிறார்கள், அந்த கர்ப்பங்களில் பாதி திட்டமிடப்படாதவை.
இளம் பருவத் தாய்மார்கள் பெரும்பாலும் பாதுகாப்பானதும் சட்டபூர்வமான பராமரிப்பை அணுகுவதிலும் உள்ள தடைகள் காரணமாக; தொற்றுகள், குறைப்பிரசவம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு உள்ளிட்ட உடல்நல சிக்கல்களின் அதிக அபாயங்களை எதிர்கொள்கின்றனர்,
ஆரம்பகால கர்ப்பத்திற்கும் சிறுவயதுத் திருமணத்திற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பிருப்பதாக WHO வின் வழிகாட்டுதல் குறிப்பிடுகிறது, 10 இல் 9 இளம் பருவ பிரசவங்கள் 18 வயதுக்கு முன் திருமணமான பெண்களிடையே நிகழ்கின்றன.
2025 இந்தப் புதிய வழிகாட்டல்கள் மூலம் , WHO இன் 2011 இல் வெளியிட்ட பரிந்துரைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டலில் கருத்தடை மற்றும் சிறுவயதுத் திருமணத் தடுப்பு கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தி, இளம் பருவப் பெண்கள் தங்கள் சொந்த எதிர்காலத்தை அவர்களாகவே வடிவமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு WHO நாடுகளை வலியுறுத்துகிறது.