வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் மரணம் - விசாரணைகள் ஆரம்பம்


சமீபத்தில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிரமாக விசாரித்து வருகின்றது.

இந்தச் சம்பவம் ராஜகிரிய பகுதியில் தொடங்கியது. அங்கு உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் 119 அவசர உதவிப் பிரிவிற்கு தகவல் வழங்கினர், அதன் பின்னர் குறித்த இளைஞர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் பதுளை மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற இளைஞனுக்கு நீதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் நிர்வாக பணிப்பாளர், சட்டத்தரணி சேனக பெரேரா, இந்த சம்பவத்திற்கான முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மரணம் ஒரு மனிதாபிமானமற்ற தாக்குதலின் விளைவாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சேனக பெரேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கோரிக்கை அறிக்கையில், வெலிக்கடை காவல் நிலையத்தில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதோடு, இதற்கு நீதியளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்பு ராஜ் குமாரி என்ற பெண் பொலிஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வழக்கில், பொலிஸ் அதிகாரியான சிந்தக கடமை தவறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்றாலும், அவர் இன்னும் வெலிக்கடை காவல் நிலையத்தில் அதிகாரியாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது. ஒரு பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாடு செய்யும்போது, அதன் ஆதார எண்ணை வழங்குவதை பொலிஸார் மறுக்கின்றனர். இது சட்டரீதியாக விசாரணை முறைமையை மீறுவதாகும்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, வெலிக்கடை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை தாக்கி கொலை செய்வது யாருடைய அதிகாரத்தினால் நடக்கிறது என்பதற்கான விளக்கம் தேவைப்படுகிறது.

கௌரவ பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் இலங்கை பொலிஸ் அமைப்பாகவே ஒரு சரியான பாதையில் செல்லும் என அனைவரும் நம்புகின்றனர். ஆனால், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மனிதநேயம் மிக்க நீதியான விசாரணை தேவை. இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்பதே இங்கு முக்கியமான விடயமாகும்.