கள்ளக் காதலியின் வீட்டிற்கு முன் உயிர்மாய்த்த பொலிஸ் சார்ஜன்ட்!


பொலன்னறுவை பகுதியில், தகாத உறவு முறிந்ததையடுத்து மனவேதனையால் கள்ளக்காதலியின் வீட்டின் முன்பாக பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் புலஸ்திபுர பொலிஸில் பணியாற்றிய சமன் என்ற சார்ஜென்ட் ஆவார். அவர் பொலன்னறுவை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டவர்.

பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின்படி, சம்பவத்துக்கு முன்பு அவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. அந்த உறவு முறிந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை (19) இரவு அவர் பெண்ணின் வீடு நோக்கிச் சென்று கதவை தட்டி அழைத்ததாக தெரிகிறது.

அப்போது, அந்தப் பெண் கதவைத் திறக்க மறுத்ததால், மனவேதனையால் அவர் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பாக தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தீக்காயங்களால் கடுமையாக காயமடைந்த சார்ஜென்ட், உடனடியாக பொலன்னறுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் ஞாயிற்றுக்கிழமை (20) அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.