இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைதான நபரின் தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!


இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 வயதான மொஹமட் ருஷ்தியின் தாய், தனது மகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

அவரது மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறானது என்றும், அதிகாரிகள் பொய்வழக்குகளை உருவாக்க முயற்சிப்பார்கள் என உறுதியாக நம்புவதாகவும், இதனால் குடும்பம் மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளதாகவும் ருஷ்தியின் தாய் தனது கடிதத்தில் தெரிவித்தார். மேலும், அவரை உடனடியாக விடுவிக்க ஆணைக்குழு தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கடந்த மார்ச் 22ஆம் திகதி கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ருஷ்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட வகையில், அவரை தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆரம்பத்தில், ருஷ்தி ஸ்டிக்கர் ஒட்டியதற்காகவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், "ஏதோ ஒரு வகையில் பயங்கரவாத செயலைச் செய்ய திட்டமிடும் நபர் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில்" அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், ருஷ்தி உலமா சபை உறுப்பினர்களின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், அவர் முஸ்லிம் நிலையை தாண்டிய நிலையில் இருப்பதாகவும், அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ருஷ்தியின் கைது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என கண்டனம் வெளியிட்டுள்ளது.