பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட வத்திக்கான்
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போப்பர் தனது 88வது வயதில் நேற்று (ஏப்ரல் 21, திங்கட்கிழமை) காலமானார்.
"பக்கவாதம், கோமா மற்றும் மீளமுடியாத இதய சுற்றோட்ட செயலிழப்பு ஆகியவை மரணத்திற்குக் காரணம்" என வத்திக்கானின் சுகாதார பணிப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் கத்தோலிக்கத் திருச்சபையை தலைமை தாங்கி வழிநடத்திய போப் பிரான்சிஸின் மறைவு, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கக் கண்டத்தில் இருந்து போப்பாக தேர்வான முதல் தலைவராகும் போப் பிரான்சிஸ், இந்த ஆண்டு இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டபோதும் முழுமையான உடல் சுகம் பெறவில்லை.
அவர் உடல்நிலை சீராகி வருவதாக கருதப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீல் சேரில் இருந்தபடி செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களை சந்தித்திருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் காலமான செய்தி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.