நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு


அரசு - தனியார் கூட்டுப் பங்குடமையின் கீழ், நாட்டின் நீரோட்டங்களை பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தும் திட்டத்திற்குத் தேவையான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, நகர்ப்புற மற்றும் உள்ளகப் பகுதிகளில் பயணிகளுக்கான போக்குவரத்தையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டின் கடலோரப் பகுதியிலும், உள்ளக நீரோட்டங்களிலும் உள்ள திறன்களை பயனாக்கி, குறிப்பிட்ட சில பகுதிகளில் படகுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, புத்தளம் - கோட்டை, கோட்டை - காலி மற்றும் காலி - மாத்தறை ஆகிய இடங்களுக்கு இடையிலான கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பயணிகளுக்கான எளிதான போக்குவரத்து வசதிகளும் வழங்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஹமில்டன் கால்வாய், பேர வாவி, தியவன்னா ஓயா மற்றும் மாது கங்கை போன்ற முக்கிய நீர்மூலங்களை பயன்படுத்தி உள்ளக நீர்வழிப் போக்குவரத்து சேவைகளை ஏற்படுத்தி, நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.