புதிய வரிகள் தொடர்பில் அமெரிக்கா-இலங்கை பேச்சுவார்த்தை : வெளியான உத்தியோகபூர்வ அறிக்கை


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் பற்றி இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரதிநிதிகள்   அமெரிக்காவின்  வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர் ஜேமியேசன் கிறீரை  ஏப்ரல் 22ம் திகதி வொஷிங்டனில் உள்ள அவரது  அலுவலகத்தில் சந்தித்தனர்.

நிதியமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் அறிவுறுத்தலிற்கமைய, அமெரிக்க அதிகாரிக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் கையளித்தனர்.

இலங்கை கடந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் ,எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் முழுமையான பொருளாதார மீட்சியடைவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் தூதுக் குழுவினர் ஜேமியேசன் கிறீரிடம் எடுத்துரைத்தனர்.

வர்த்தக நிலுவை மற்றும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் இலங்கை குழுவினர் எடுத்துரைத்தனர்.

இதேவேளை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்காக இலங்கை முன்மொழிவுகளை முன்வைத்தமைக்கு தூதுவர் கிறீர் நன்றியை தெரிவித்தார்.

மேலும் நியாயமான சமமான வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக இரண்டு நாடுகளிற்கு இடையில் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதன் பின்னர் அன்றைய தினம் இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் அமெரிக்காவிற்கு எழுத்துமூலமாக வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து மேலும் விவாதிப்பதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி வர்த்தக பிரதிநிதி பிரென்டன் லைன்ஞ் தலைமையிலான, தூதுவர் கிரீர் நியமித்த யுஎஸ்டிஆர் பிரதிநிதிகள் குழுவையும், தென்னாசியாவிற்கான இயக்குநர் எமிலி ஆஸ்பையினையும் சந்தித்தனர்.

இரண்டு நாடுகளிற்கும் இடையில் இரு தரப்பு உடன்படிக்கையை சாத்தியமாக்குவதற்காக பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு இருதரப்பும் இணங்கின.

மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான விருப்பத்தை இரு தரப்பும் வெளியிட்டன.