இஸ்ரேலுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவருக்கு புனர் வாழ்வளிக்குமாறு உலமா சபை கூறியதாக நான் கூறவில்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


இஸ்ரேலுக்கு எதிராக ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மொஹமட் ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என உலமா சபை கூறியதாக நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன.

இவ்வாறு வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணைகளில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என உலமா சபை தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.

‘இந்த நபர் குறித்து உலமா சபையிடம் விடயங்களை நாங்கள் முன்வைத்தோம். அதற்கு அவர்கள் முஸ்லிம் என்ற நிலையை தாண்டிய நிலையில் இருப்பவர் எனவும் அவர் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் எனவும் தெரிவித்ததாக’ கடந்த மார்ச் 31 ஆம் திகதியன்று செய்தியொன்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்து பிழையானது அதனை நாம் கண்டிக்கிறோம் இது விடயமாக நாம் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடமே வினவ வேண்டும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘இது எனது கூற்று அல்ல விசாரணை அதிகாரிகள் உலமா சபையிடம் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் அவர்கள் என்னிடம் தெரிவித்த கருத்துக்களையே நான் கூறினேன்’ என ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.