நவீன வரலாற்றில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் அதிகம் கொண்ட பகுதியாக மாறியுள்ள காசா!
நவீன வரலாற்றில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பாதிப்பு போர் காரணமாக ஏற்பட்டிருக்கிறது. கடந்த 544 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 50,523 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி பலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள் என்றும், இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
“இந்தக் குழந்தைகள் சோகமான சூழ்நிலையில் வாழ்கின்றனர், பலர் கிழிந்த கூடாரங்கள், அழிக்கப்பட்ட வீடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், கிட்டத்தட்ட முற்றிலும் சமூகப் பராமரிப்பு மற்றும் உளவியல் ஆதரவு இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 17,954 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 274 புதிதாகப் பிறந்த குழந்தைகளும் ஒரு வயதுக்குட்பட்ட 876 குழந்தைகளும் அடங்குகின்றனர்.
‘இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருந்த கூடாரங்களில் 17 குழந்தைகள் குளிரில் உறைந்து இறந்துள்ளனர். மேலும் 52 பேர் பட்டினி மற்றும் முறையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலிய முற்றுகையின் மத்தியில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வரவிருக்கும் பஞ்சம் காரணமாக 60,000 குழந்தைகள் மரணத்தை எதிர்கொள்கிறார்கள் என்று பணியகம் எச்சரித்தது.
உயிரிழப்பு ஒரு பக்கம் எனில், உயிர் பிழைத்தவர்கள் உணவு, குடிநீர், மருந்துக்காக நீண்ட போராட்டத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.
போரில் மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. WHO, Red Cross போன்ற அமைப்புகள் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ விரும்பினாலும், உள்ளே நுழைய இஸ்ரேல் அனுமதி மறுக்கிறது. ஐநா சபை இதனை ‘மனிதாபிமான பேரழிவு’ என்றே அழைக்கிறது.
காசாவில் 23 இலட்சம் மக்கள் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு மண்டலங்களில் தங்கியிருக்கும் மக்கள் மீது கூட குண்டு வீசப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.