நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

1 day ago

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வகை வைத்தியர்களை தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அவர், சுகாதார வைத்திய அதிகாரிகளின் மூலம் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அனுமதி பெறாத போலி வைத்தியர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,  

நாட்டில் பல்வேறு வைத்திய முறைகள் செயற்பாட்டில் உள்ளன. மேலும் அந்த முறைகளுடன் தொடர்புடைய வைத்தியர்கள் வைத்திய சபையில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், சில பதிவுகளுக்கு பிரச்சினைகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வைத்திய முறைகளுக்கு அப்பாலான முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

போலி வைத்தியர்களும் நாட்டில் உள்ளனர். இவ்வாறான வைத்தியர்களை தேடி, சுகாதார வைத்திய அதிகாரிகளின் மூலம் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அனுமதி பெறாத போலி வைத்தியர்கள் இருப்பின், அவர்கள் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், மருந்து விநியோக செயற்பாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்புடையுள்ளன. எனவே, மருந்து பிரச்சினைகளுக்கு தீர்வாக, இந்த நிறுவனங்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே முக்கியம். இந்த முயற்சியையும் தற்போது சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் சில சிக்கல்கள் உள்ளன. இதனால் கோப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், மார்ச் மாதம் முடிவதற்குள் மருந்து விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.