அதிக உயர் டெங்கு அபாயம் – 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 15 சுகாதார பிரிவுகள் அதி உயர் அபாயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன
நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 17 ஆம் திகதி நிலவரப்படி, நாடளாவிய ரீதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
சில நாட்களாக நிலவிவந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, டெங்கு பரவல் அதிகரித்துள்ளதுடன், அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 23 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், காலி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணலாம் எனவும், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் எனவும், சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.