அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த தாழ்வுப் பகுதி தொடர்ந்தும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (11) புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வட மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.