இந்தியாவில் அதிக ஆபத்து நிறைந்த பாட்டில் குடிநீர் தொடர்பில் விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு காலத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாக்கெட் குடிநீர் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் வெளியாகி, ஒருவழியாக அதற்கு முடிவுகட்டப்பட்ட நிலையில், தற்போது பாட்டில் குடிநீர் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இதற்கான மாற்று என்ன? தீர்வு என்ன? என்பதுதான் இன்னமும் புதிராகவே உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், பேக்கேஜ் செய்யப்பட்ட பாட்டீல் குடிநீர் மற்றும் சத்துகள் சேர்க்கப்பட்ட குடிநீர் பாட்டில்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கேஜ் செய்யும் ஆலைகள் தங்களது குடிநீர் பாட்டில் உரிமத்தை புதிதாகப் பெற அல்லது புதுப்பிக்கும் முன் மிகக் கடுமையான ஆய்வுகளுக்குள்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகிறது.
இந்திய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையானது, அதிக ஆபத்து நிறைந்த உணவுகள் பட்டியலில் சேர்த்திருப்பதால், குடிநீர் பாட்டில்கள் வழக்கமான ஆய்வு மற்றும் சோதனைகளையும் தாண்டி கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளது.
நவம்பர் 29 ஆம் தேதி இது தொடர்பான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில், உடனடியாக இது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இந்த உத்தரவின்படி, குடிநீர் பாட்டில் தயாரிப்பாளர்கள் மூன்றாம் கட்ட உணவுப் பாதுகாப்பு தணிக்கைக்கும், தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. ஏற்கனவே மத்திய உரிமம் பெற்றிருப்பவர்களும், இனி அதிக ஆபத்து நிறைந்த உணவுகள் பட்டியலில் குடிநீர் பாட்டில் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த குடிநீர் பாட்டில் தயாரிப்பின்போது, மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடுவதற்கான அபாயங்கள் ஏற்படுத்தப்படுவதில்லை என்று ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்துதான் உரிமத்தைப் பெற முடியும்.
இந்த ஆய்வான செய்யப்பட்டு அனுமதி பெறுவது என்பது, ஒவ்வொரு முறை குடிநீர் பாட்டில் உரிமத்துக்கான பதிவு மற்றும் புதுப்பிக்கும் நடவடிக்கைகளின்போதும் அவசியமாகிறது.
இதன் மூலம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, அவர்கள் பயன்படுத்தும் பாட்டில் குடிநீரின் தரத்தை உறுதி செய்வதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பால் சார்ந்த குளிர்பான வகைகள், தானியத்தில் தயாரிக்கப்பட்ட குளிர்பான வகைகள் மற்றும் மால்ட் போன்ற குளிர்பானங்கள் ஆகியவை ஆரோக்கிய பானங்கள் என வகைப்படுத்தப்படுவதிலிருந்து உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியேற்றிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கையும் அதனுடன் இணைந்துள்ளது.