திருத்தப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு திட்டம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
திருத்தப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு திட்டம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதியின் 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி சட்டத்துக்கு அமைய வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களுக்கமைவாக அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் திருத்தம் செய்யப்பட்டு வரத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, வறிய குடும்பங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உதவித்தொகை 8500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை 17,500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த நல உதவித்தொகை 5,000 மற்றும் 17,000 ரூபா வழங்கப்படுமெனவும் 960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2024 மே மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இழப்பீட்டு காலத்தை 31.03.2025 வரை நீடித்துள்ளது.
இருப்பினும், ஏற்கனவே பலன்களை பெற்று, பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பயனாளிகளுக்கும், மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்து தற்போது பரிசீலனைக்கு உள்ளான விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் தகைமையின் அடிப்படையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.