இலங்கை ஜனாதிபதி அநுர மற்றும் இந்தியப் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (16) முற்பகலில் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியாவை சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர்.
ஜனாதிபதிக்கு 21 மரியாதை வேட்டுக்கள் ஏவப்பட்டு, இந்திய இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதன்பின், இரு நாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய அரச தலைவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர்.
உத்தியோகப்பூர்வ வரவேற்புக்குப் பிறகு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ராஜ்கொட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தி, அசோக மரக்கன்றை நாட்டினார். மேலும், "காந்தி தர்ஷன்" வளாகத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் மூலம் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள், மற்றும் ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் இன்று இரவு ஜனாதிபதி திசாநாயக்க சந்திக்க உள்ளார். இவை தவிர, உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா ஆகியோருடன் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.
அத்துடன், இந்திய தொழில்துறை பிரதிநிதிகளுடன் இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னேற்றுவதற்கான கலந்துரையாடல்களும் நிகழ உள்ளன