இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் அனைத்தும் 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்!

1 day ago

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரம் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட வினாத்தாள்கள் திருத்தப்படும் என்றும், இந்த விஷயம் தொடர்பாக அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன கூறியுள்ளார்.

இதனிடையே, வடமத்திய மாகாண அரச பாடசாலைகளில் 11ஆம் தர வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வினாத்தாள்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று மாகாண கல்வி திணைக்களம் அனுராதபுரம் பொலிஸில் இரண்டு முறை முறைப்பாடு செய்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படுவதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

சிங்கள இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களின் வினாத்தாள்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதன் காரணமாக பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றும் நாளையும் நடைபெறவிருந்த 11ஆம் தர பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர்களின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.