வங்காள விரிகுடாவில் புயல் நகரும் வேகத்தில் மாற்றம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறையிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இன்று (26) காலை 8.00 மணியளவில் இலிருந்து 140 கி.மீ. தூரத்தில் காணப்படும். நாளை மாலை 3.00 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து அம்பாறையில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் அதன் மையம் காணப்படும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27 ம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கி.மீ. இல் காணப்படும்.
அதன் பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கி.மீ. தூரத்தில் காணப்படும். பின்னர் 27ம் திகதி மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கிழக்காக 109 கி.மீ. தூரத்தில் இந்த புயல் காணப்படும்.
இந்நிலையில், தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த புயலின் இடவமைவு மேற்குறிப்பிட்ட இடங்களில் காணப்படும். நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் என்பதைக் கருத்தில் கொள்க. கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தீர்மானமாக அறிந்ததும் தெரிவிக்கப்படும்.
நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அம்பாறை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
இதற்கமைவாக முன்னரே குறிப்பிட்டபடி இன்றும் நாளையும் (2024 நவம்பர் 26 மற்றும் 27) மிக முக்கியமான நாட்களாகும். இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
எனவே பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.