மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கான இறுதி வாய்ப்பு!
இலங்கையில் உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் நடவடிக்கை இன்று (10) நிறைவடைகின்றது.
இந்த நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து மாகாணங்களிலும் இந்த கருத்து சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று நடைபெறவுள்ளது.
அத்துடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
அதேவேளை, மின்சாரக் கட்டணக் குறைப்பை விரைவில் முன்னெடுக்க முடியாது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நேற்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.