நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு

1 week ago

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு  நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நத்தார் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில்  இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், அந்தந்த காவல்துறை பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், உதவி காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுவார்கள். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை காவல்துறையினர் நாடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் வாகனம் ஓட்டும் நடவடிக்கைகளில்  கவனக்குறைவாக செயற்படும் சாரதிகளை பரிசோதிக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளில் குற்றச் செயல்களைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிவில் உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.” என தெரிவித்தார்.