நாட்டில் தொடரும் கனமழையால் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.