விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அதற்கான அடுத்த கட்ட தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் கசித்த 3 வினாக்களுக்குப் புள்ளிகளை வழங்குவதற்கான பரீட்சைகள் திணைக்களத்தின் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் வலுவற்றதாகக் கூறி, அதை திரும்பப்பெறச் செய்தது.
இதன் பின்னணியில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த விசேட குழு முன்வைத்த பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான ஒன்றை நடைமுறைப்படுத்துமாறும், உயர்நீதிமன்றம் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
இந்த விடயம் தொடர்பாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பரீட்சை ஆணையாளர் நாயகம், உயர்நீதிமன்றின் உத்தரவை ஆராய்ந்து, அதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அவரது பேச்சு:
"உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து, விரைவில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளையும் வெட்டுப்புள்ளிகளையும் வெளியிட முடிவு எடுக்கப் போகின்றோம்."
மேலும், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.